/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபைல் போனில் பம்புசெட்டுகளை இயக்க மானியம்
/
மொபைல் போனில் பம்புசெட்டுகளை இயக்க மானியம்
ADDED : ஜன 25, 2025 01:18 AM
மொபைல் போனில் பம்புசெட்டுகளை இயக்க மானியம்
ராசிபுரம், :நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள், இரவு நேரம் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளியில் உள்ள பம்புசெட்டுகளை இயக்க செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும்போது, பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் நடக்கிறது. இதை தவிர்க்க, பம்புசெட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்க, மொபைல் போனில் பம்பு
செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவி, வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியத்தில் வழங்கப்படுகிறது-.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் சிறு, குறு பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில், 50 சதவீதம், அதிகபட்சமாக, 7,000 ரூபாயும் மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில், 40 சதவீதம் அல்லது அதிகபட்சம், 5,000 ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் நகல், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான தாசில்தார் சான்று, மின் இணைப்பு சான்றின் நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன், விண்ணப்பத்தை தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட உதவிப்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விரிவாக்க மையம், சிவில் சப்ளைஸ் கிடங்கு பின்புறம், அண்ணாமலை நகர், வசந்தபுரம் அஞ்சல், திருச்சி மெயின் ரோடு, நாமக்கல் மற்றும் உதவி செயற் பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, வரகூராம்பட்டி, ஆண்டிபாளையம் அஞ்சல், ஈரோடு ரோடு, திருச்செங்கோடு-637214 என்ற முகவரியில் நேரடியாக சென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சாலையோர வியாபாரிகளுக்கு பி.எம்., ஸ்வநிதி திட்டத்தில் கடன்ராசிபுரம், :'ராசிபுரம் நகராட்சி பகுதியில் சாலையோரம் கடை வைத்துள்ளவர்களுக்கு, மத்திய அரசின் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது' என, நகராட்சி கமிஷனர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராசிபுரம் நகராட்சியில், தெருவோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் பி.எம்., ஸ்வநதி திட்டத்தில் கடன் வழங்கப்படுகிறது. முதல் தவணையாக, 10,000 ரூபாய் வழங்கப்படும்.
குறிப்பிட்ட நாட்களில் கட்டி முடித்தால், 2வது தவணையாக, 20,000 ரூபாய் வழங்கப்படும். இதையும் முறையாக செலுத்தினால், 3வது தவணையாக, 50,000 ரூபாய் வழங்கப்படும். கடன் தேவைப்படும் வியாபாரிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 2 ஆகியவற்றை நகராட்சியில் வழங்கி பதிவு செய்துகொள்ளலாம். கடன் வங்கி மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.