ADDED : மார் 08, 2012 02:39 AM
நாமக்கல்: நாவல் பழத்துக்கு கணிசமான விலை கிடைப்பதால், மாவட்டத்தில் கணிசமான ஏக்கர் பரப்பளவில் நாவல் விளைவிக்கப்படுகிறது. தற்போது, மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் விளைவிக்கப்படும் நாவல் மரங்களில், பூ வைக்கும் சீஸன் துவங்கியுள்ளது.
நாவல் பழம், பல்வேறு மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக, நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோயை, நாவல் பழம் கட்டுக்குள் கொண்டு வரும் திறன் உடையது என, சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்பழம், உவர்ப்பு, இனிப்பு ஆகிய இரண்டும் கலந்த சுவை உடையது என்பதால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பது வழக்கம்.
பல்வேறு சிறப்புகள் பொருந்திய நாவல் பழம் சீஸன், ஓரிரு மாதத்தில் துவங்க உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் நாவல் மரத்தில் பூ வைக்கும் சீஸன் துவங்கும். பின், மே மாதம் பழத்தை அறுவடை செய்யலாம். நாவல் பழத்துக்கு கணிசமான விலை கிடைத்து வருகிறது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் கணிசமான ஏக்கர் பரப்பளவில் நாவல் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருச்செங்கோட்டை சேர்ந்த விவசாயி குமரவேல் கூறியதாவது:
நாவல் மரம் நடவு செய்து, பத்தாண்டுகளுக்கு பின் பலன் தர துவங்கும். அதன்பின், 100 ஆண்டுகள் வரை மரத்தில் பழம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் பயிரிட்டு பலன் தரும்வரை ஒரு லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும். நல்ல தண்ணீர் வசதி, உரிய பராமரிப்பும் இருந்தால், ஒரு மரத்தில் சராசரியாக சீஸன் சமயத்தில் மட்டும், 120 கிலோ நாவல் பழம் அறுவடை செய்ய இயலும்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் மரத்தில் பூ வைக்கும். பின், மே மாதத்தில் பழத்தை அறுவடை செய்யலாம். ஒரு கிலோ நாவல் பழம் மொத்த விலையில், 60 முதல், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு கிலோ நாவல் பழம், 150 முதல், 200 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
பழத்தின் சுவை மிகுதி என்பதால், பலரும் விரும்பி வாங்குவர். சுமாரான மழைப்பொழிவு இருந்ததால், மகசூல் நன்கிருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
