/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வயலில் புகுந்த ஏரி தண்ணீர் வடியாததால் 150 ஏக்கரில் பருத்தி, மக்காச்சோளம் வீண்
/
வயலில் புகுந்த ஏரி தண்ணீர் வடியாததால் 150 ஏக்கரில் பருத்தி, மக்காச்சோளம் வீண்
வயலில் புகுந்த ஏரி தண்ணீர் வடியாததால் 150 ஏக்கரில் பருத்தி, மக்காச்சோளம் வீண்
வயலில் புகுந்த ஏரி தண்ணீர் வடியாததால் 150 ஏக்கரில் பருத்தி, மக்காச்சோளம் வீண்
ADDED : ஜன 18, 2025 01:46 AM
வயலில் புகுந்த ஏரி தண்ணீர் வடியாததால் 150 ஏக்கரில் பருத்தி, மக்காச்சோளம் வீண்
எருமப்பட்டி,:பழையபாளையம் வடக்கு ஏரிக்கரை, நீலக்கடக்கால் பகுதியில் ஏரி நிரம்பி தண்ணீர் வயல்களில் புகுந்தது. ஆனால், அந்த தண்ணீர் இதுவரை வடியாததால், 150 ஏக்கரில் பயிரிட்டிருந்த பருத்தி, மக்காச்சோளம், சோளப்பயிர்கள் வீணாகி வருகின்றன.
சேந்தமங்கலம் அருகே, பழையபாளையத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், கொல்லிமலையில் பெய்த கன மழையால், இந்த ஏரி நிரம்பி, வடிகால் வழியாக துாசூர் ஏரிக்கு சென்றது. அதன்பின், கடந்த, 2 ஆண்டாக கொல்லிமலையில் போதிய மலை இல்லாததால் வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் கொல்லிமலையில் பெய்த அதிகன மழையால், காட்டாற்று வெள்ளம் உருவாகி, சேந்தமங்கலம், துத்திக்குளம், பாப்பன்குளம் ஏரிகள் நிரம்பி, பழையபாளையம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால், கடந்த, 2 ஆண்டாக வறண்டிருந்த ஏரி, கிடுகிடுவென நிரம்பியது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஏரியின் வடக்கு பகுதி விவசாயிகள் மட்டும் கவலையடைந்தனர்.
ஏனெனில், இந்த ஏரியின் வடக்கு பகுதி, முத்துக்காப்பட்டி பஞ்., நீலக்கடக்கால் பகுதியில் உள்ளது. ஏரி நிரம்பியதும் தண்ணீர் வெளியேற, பழையபாளையத்தில் ஒரு வடிகாலும், நீலக்கடக்கால் என்ற இடத்தில் ஒரு வடிகாலும் உள்ளது. பழையபாளையத்தில் உள்ள வடிகால் வழியாக தண்ணீர் செல்லும் இடத்தில் பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலத்தின் அடியில் தடையின்றி தண்ணீர் செல்கிறது.
ஆனால், முத்துக்காப்பட்டி பஞ்., நீலக்கடக்கால் என்ற இடத்தில், சில ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேடான பகுதியில் பாலம் கட்டப்பட்டது. இதனால், ஏரி தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி, அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.
இதனால், 60 ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காச்சோள வயலில், முழங்கால் அளவிற்கு தற்போது வரை தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதேபோல், 20 ஏக்கரில் பருத்தி, 25 ஏக்கரில் சோளம் என, 150 ஏக்கரில் பயிரிட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, நீலக்கடக்கால் பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது: இங்கு தண்ணீரில் மூழ்கியுள்ள, 150 ஏக்கரும் பட்டா நிலம் தான். கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் ஏரி நிரம்பியபோது, பாலம் வழியாக தண்ணீர் செல்ல வழியின்றி மழைநீர் வயல்களில் புகுந்தது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. தற்போதும் அதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டியபோது, 2 அடி ஆழத்திற்கு மண் வெட்டி விட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. வரும் காலங்களில் ஏரி நிரம்பினால் இதுபோன்று நடக்காமல் இருக்க, பாலத்தின் அடியில் தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.