/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராஜா வாய்க்கால் கரையோரம் குப்பை குவிப்பு டவுன் பஞ்., செயலருக்கு நீர்வளத்துறை நோட்டீஸ்
/
ராஜா வாய்க்கால் கரையோரம் குப்பை குவிப்பு டவுன் பஞ்., செயலருக்கு நீர்வளத்துறை நோட்டீஸ்
ராஜா வாய்க்கால் கரையோரம் குப்பை குவிப்பு டவுன் பஞ்., செயலருக்கு நீர்வளத்துறை நோட்டீஸ்
ராஜா வாய்க்கால் கரையோரம் குப்பை குவிப்பு டவுன் பஞ்., செயலருக்கு நீர்வளத்துறை நோட்டீஸ்
ADDED : ஆக 20, 2024 03:05 AM
ப.வேலுார்: ப.வேலுார் பகுதியில் சேகரிக்கும் குப்பையை, ராஜா வாய்க்கால் கரையோரம் கொட்டி குவிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், குப்பையை அப்புறப்படுத்த அறிவுறுத்தி, டவுன் பஞ்., செயலருக்கு, நீர்வளத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை, டிராக்டர்கள் மூலம் பழைய பைபாஸ் சாலையில், டவுன் பஞ்.,க்கு சொந்தமான, இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.
சில நாட்களாக குப்பையை கிடங்கில் கொட்டாமல், தரம் பிரிக்காமல் பழைய பைபாஸ் சாலை அருகே, ராஜா வாய்க்கால் கரையோரத்தில், துாய்மை பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். இதனால், குப்பை மலைபோல் தேங்கி, அவ்வப்போது சரிந்து ராஜா வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் அடித்து செல்கிறது. இந்த குப்பையை அகற்ற வேண்டும் என, பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நீர்வளத்துறை சார்பில், டவுன் பஞ்., செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'நீர்வளத்துறைக்கு சொந்தமான ராஜா வய்க்கால், ஜேடர்பாளையத்தில் தொடங்கி, நன்செய்இடையாறு வரை செல்கிறது. இதன் மூலம், 16,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது, ப.வேலுார் சோதனைச்சாவடி அருகே, டவுன் பஞ்., குப்பையை மலைபோல் குவித்து வைத்துள்ளதால், தண்ணீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, குப்பையை உடனடியாக அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் இனிவரும் காலங்களில் குப்பையை கொட்டாத வண்ணம் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'ப.வேலுார் டவுன் பஞ்.,க்கு சொந்தமான குப்பை கிடங்கு அருகே, தனிநபர்கள் பிளாட் அமைத்து விற்பனைக்கு வைத்துள்ளனர். கிடங்கில் குப்பையை கொட்டினால் பிளாட் விற்பனையாகாது. அதனால், தனியாருக்கு சாதகமாக, குப்பையை அங்கே கொட்டாமல், கவனிப்புக்கு கட்டுப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், இதற்கு தீர்வு காண வேண்டும்' என்றனர்.
ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சோமசுந்தரத்திடம் கேட்டபோது, ''பொதுவாகவே காவிரி கரையோர பகுதி முழுவதுமே இதே நிலைமை தான் உள்ளது. குறிப்பாக, திருச்சி நகரத்தில் கழிவுகள் நிறைய கிடக்கின்றன. தமிழக அரசு, மாநில அளவில் குப்பையை கொட்ட தனி சித்தாந்தம் கொண்டு வரணும். மக்கள் பிரதிநிதிகள், ஐ.ஏ.எஸ்., அளவில் இதை கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். குப்பையை மாற்று இடத்தில் கொட்ட ஏற்பாடு செய்து வருகிறேன்,'' என்றார்.