/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீதிமன்றத்தில் புகைப்பட கண்காட்சி
/
நீதிமன்றத்தில் புகைப்பட கண்காட்சி
ADDED : பிப் 01, 2025 12:45 AM
நீதிமன்றத்தில் புகைப்பட கண்காட்சி
நாமக்கல்,: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு குறித்து, 2 நாள் புகைப்பட கண்காட்சி, நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குருமூர்த்தி தலைமை வகித்து, புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில், கிராமப்புறங்களில் நீதிபதி, வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள், நேரடியாக பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு வழங்கிய புகைப்படங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம், மனநலம் குன்றிய காப்பகம் போன்றவற்றில் சட்டம் குறித்து விழிப்புணர்வும், சட்ட உதவியும் வழங்கிய புகைப்படங்கள்.
மக்கள் நீதிமன்ற புகைப்படங்கள், திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணர்வு, பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியருக்கான சிறப்பு சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வக்கீல்களுக்கு வழங்கிய பயிற்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள், கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
இந்த புகைப்பட கண்காட்சியை, நாமக்கல் மாவட்ட அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வேலுமயில் செய்திருந்தார்.