ADDED : செப் 07, 2024 07:50 AM
நாமக்கல்: விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஈரோடு, திருச்சி, சேலம், பெரம்பலுார், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், நாமக்கல் கடைவீதியில், அரை அடி முதல், 10 அடி உயரம் கொண்ட, மூசிக கணபதி, ராமர் கோவில் கணபதி, ராஜகணபதி, பிள்ளையார் பட்டி கணபதி, சக்தி கணபதி, பாலமுருகன் சகோதர கணபதி, நடராஜர் நடன கணபதி, தங்க நிற கணபதி என, பல்வேறு விதமான சிலைகள், 100 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
நீர்நிலைகளில் எளிதில் கரையும் வகையில் காகித கூழ், மரவள்ளி கிழங்கு மாவு, களிமண் கொண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விற்பனைக்கு வைத்துள்ள சிலைகளை சிறுவர்கள், பெரியவர்கள் என, அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.