ADDED : ஜூலை 11, 2025 01:54 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலையில் மலைகுன்றின் மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை உள்ளிட்ட தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருவர். அதன்படி நேற்று ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
மதியம், 12:00 மணிக்கு மலைகுன்றின் மீதுள்ள முருகனுக்கு, பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு மலைக்கு கீழுள்ள அடிவார மண்டபத்தில் முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* குமாரபாளையம், மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் உள்ள நந்திக்கு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், குமாரபாளையம்,கோட்டை மேடு காளியம்மன் கோவில்கள், பண்ணாரி மாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், பத்திரகிரியார் தியான மண்டபம், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டது.