ADDED : ஏப் 30, 2026 05:54 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, காவிரி சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சட்ட விரோதமாக இரவு, பகலாக மது விற்பனை நடக்கிறது. இதனால், மது குடிக்க பலரும் இப்பகுதிக்கு வந்து செல்வதால், எந்நேரமும், 'குடி'மகன்களின் நடமாட்டம் இருந்துகொண்டே உள்ளது. குறிப்பாக, இரவில், 'குடி'மகன்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இரவில், குடித்துவிட்டு போதை தலைக்கேறியவுடன், குடியிருப்பு பகுதியில் அரைகுறை ஆடையுடன் ஆபாச வார்த்தைகளில் உளறி கொண்டிருக்கின்றனர். சில சமயங்களில், பொது மக்களிடம் சண்டைக்கு செல்கின்றனர். இதனால், இரவில் பொது மக்கள் செல்லவே தயக்கமடைகின்றனர். அந்தளவுக்கு, 'குடி'மகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
எனவே, பள்ளிப்பாளையம் போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு, சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
