ADDED : மே 16, 2026 05:12 AM

நாமக்கல்: விஷ்ணுபதி புண்ணியகாலத்தையொட்டி, நாமக்கல் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கொடிமரம் சுற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஆண்டுக்கு நான்கு நாட்கள் மட்டுமே, விஷ்ணுபதி புண்ணியகாலம் எனும் புனித நாட்கள் வருகின்றன. தமிழ் மாதங்களான வைகாசி முதல் நாள், ஆவணி முதல் நாள், கார்த்திகை முதல் நாள், மாசி முதல் நாள் ஆகிய நாட்களை புனிதநாட்களாக கருதப்படுகிறது. அந்த நாட்களில், அருகில் உள்ள பெருமாள் கோவில்களில் உள்ள கொடிமரத்தை பக்தர்கள், 27 முறை சுற்றிவந்து சுவாமியை வழிபாடு செய்வர்.
அதன்படி, வைகாசி முதல் நாளான, நேற்று அதிகாலை, 1:30 மணி முதல் காலை, 10:30 மணிவரை விஷ்ணுபதி புண்ணியகாலம் வந்ததையடுத்து, நாமக்கல் பகுதியில் பக்தர்கள் மகா விஷ்ணு, மகாலட்சுமியை வழிபாடு செய்தனர். அதேபோல், கோட்டை சாலையில் உள்ள நாமகிரித்தாயார், நரசிம்மர் கோவிலும், மெயின்ரோட்டில் உள்ள அரங்கநாயகி உடனமர் அரங்கநாதர் கோவிலில் உள்ள கொடிமரத்தை ஏராளமான பக்தர்கள், 27 முறை வலம் வந்து வணங்கினர்.
