/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
54 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிவிண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
54 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிவிண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
54 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிவிண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
54 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிவிண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜன 22, 2025 01:25 AM
54 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிவிண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
நாமக்கல்:'மாவட்டத்தில், 54 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி ஏரி, குளங்களில் வண்டல் மண் இலவசமாக எடுத்து, தங்களது வயல்களில் பயன்படுத்து வதற்கு, தாசில்தார் அனுமதி பெற்று வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதன் மூலம், நீர்நிலைகளை ஆழப்படுத்தி, நீர் சேகரிப்பு கொள்ளளவை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் அதிகரிக்க முடிகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதால் கிணறு களிலும், ஆழ்குழாய்களிலும் நீர்மட்டம் உயரும்.
தற்போதைய சூழலில், அதிகப்படியான ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தினால், மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு, மண் மலட்டுத்தன்மையுடையதாக மாறுகிறது. அதனால், நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விளை நிலங்களில் நிரப்புவதால், மண்வளம்
மீட்டெடுக்கப்படுவதுடன். அதிக மகசூல் ஈட்டும் வாய்ப்பு உருவாகிறது. இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை, நஞ்சை நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு, 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால், 90 கன மீட்டரும், வண்டல் மண் எடுத்துக்கொள்ள
அனுமதியளிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் இருந்து, விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 28 நீர்நிலைகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
கட்டுப்பாட்டில் உள்ள, 88 நீர்நிலைகளிலும், மொத்தம், 116 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க, முதல்கட்டமாக, 2024, ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
இதுவரை, 3,753 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி அடிப்படையில், 2,977 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க தாசில்தாரால் அனுமதிக்கப்பட்டு, 90,410 கன மீட்டர், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வண்டல்மண் விவசாய பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது கூடுதலாக நீர்வளத்துறை
கட்டுப்பாட்டில் உள்ள, 33 நீர்நிலைகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 21 நீர்நிலைகளிலும் மொத்தம், 54 நீர்நிலைகள் என, மொத்தம், 170 நீர்நிலைகளில் வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், இ-சேவை மையத்தை அணுகி, இணையத்தில் விண்ணப்பித்து தாசில்தாரின் அனுமதி பெற்று வண்டல்மண் எடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.