ADDED : ஆக 20, 2026 05:37 AM
நாமக்கல்:கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
ஜேடர்பாளையம்
காவிரி படுகை அணையில் இருந்து ராஜவாய்க்கால், குமாரபாளையம்,
பொய்யேரி, மோகனுார், பள்ளவாய்க்கால் என, ஐந்து வாய்க்கால்களில் வரும்
பாசன நீரில், மொத்தம், 16,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.
இப்பகுதியில், வெற்றிலை, வாழை, கரும்பு, பாக்கு, கோரை போன்ற நீண்ட கால
நஞ்சை பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக, ராஜவாய்க்கால்
பகுதியில் வெற்றிலை கொடிக்கால் விவசாயம், 5,000 ஏக்கருக்கு மேல்
சாகுபடி செய்யப்படுகிறது. இது, தினமும் நீர் பாய்ச்சக்கூடிய ஒரு
பயிர். இந்நிலையில், ஐந்து வாய்க்கால்களிலும், கடந்த, 15
நாட்களுக்கு மேல் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்,
பயிர்கள் வாடி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது
சம்பந்தமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பாசன வாய்க்கால்களில்
தண்ணீர் திறக்கவில்லை.
தண்ணீர் திறக்க வலியுறுத்தி, ப.வேலுாரில்
இன்று, விவசாயிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில்
நடத்தப்படும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு, கொ.ம.தே.க., முழு
ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
