/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிக்கன் ரைசில் விஷம் போலீசார் தீவிர விசாரணை
/
சிக்கன் ரைசில் விஷம் போலீசார் தீவிர விசாரணை
ADDED : மே 03, 2024 02:48 AM
நாமக்கல்:நாமக்கல்லில், ஓட்டலில் வாங்கிய சிக்கன் ரைசில் விஷம் கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் எருமப்பட்டி தேவராயபுரத்தை சேர்ந்தவர் சண்முகம், 67. இவரது பேரன் பகவதி, 20, தனியார் பொறியியல் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி சண்முகம் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். இதனால், பகவதி அவர்களுக்கு உணவு வாங்க நாமக்கல் வந்தார். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டு விட்டு, 7 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி கொண்டு புறப்பட்டார்.
செல்லும் வழியில் கொசவம்பட்டி வீட்டில் இருந்த தாய் நதியா, 40; என்பவரிடம் ஒரு சிக்கன் ரைஸ் தந்துவிட்டு தேவராயபரத்தில் உள்ள தாத்தா சண்முகம் வீட்டில் மற்றதை கொடுத்துள்ளார்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் நதியாவுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து நதியா, சண்முகத்திற்கு போன் செய்து சாப்பிட வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அதற்குள் சண்முகம் பாதிக்கு மேல் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் சண்முகத்திற்கும் வயிற்றுவலி, வாந்தி வந்துள்ளது.
நதியா, சண்முகம் இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நதியா, சண்முகம் சாப்பிட்ட சாப்பாட்டில் மட்டும் பூச்சி கொல்லி மருந்து நாற்றம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் சாப்பிட்டு மீதம் வைத்திருந்த உணவு, மற்றவர்கள் சாப்பிட்டதில் உள்ள மீதி உணவுகளை, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதே சமயம் மாணவன் பகவதி, ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் பகவதி வாங்கி சென்ற உணவில், விஷம் கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.