/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஈரோட்டில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம்
/
ஈரோட்டில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம்
ADDED : மார் 22, 2024 02:05 AM
நாமக்கல்.''வரும், 31ல், ஈரோட்டில் லோக்சபா வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்,'' என, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் ராஜேஸ்குமார் எம்.பி., பேசினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், கொ.ம.தே.க.,விற்கு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி இளைஞரணி மாநில செயலர் சூரியமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மதுரா செந்தில், கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், வேட்பாளர் சூரிய மூர்த்தியை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:
நாமக்கல் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி வெற்றி பெறுவதற்கு, அனைத்து கட்சி நிர்வாகிகளும், முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். வரும், 31ல், கரூர், நாமக்கல், ஈரோடு லோக்சபா தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். தமிழக அரசு சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, மக்களிடம் ஓட்டு சேகரித்து, வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
சங்ககிரி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சுந்தரம், நாமக்கல் மாவட்ட காங்., தலைவர்கள் சித்திக், செல்வகுமார், கொ.ம.தே.க., மாவட்ட செயலர்கள் மாதேஸ்வரன், ராஜவேல், தமிழ் மணி, வி.சி., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

