/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 05, 2024 02:17 AM
ப.வேலுார்:'மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்' என வலியுறுத்தி, நாமக்கல்லில் சுங்கச்சாவடியை, பல அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், கட்டுனர் சங்கம், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம், மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் ஒன்றிணைந்து, நேற்று காலை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி தலைமை வகித்தார்.
அப்போது அவர்கள், 'நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; கட்டுமான பணிகள் பாதிக்காமல் இருக்க, தமிழக அரசு உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும்' என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட, 245 பேரை, போலீசார் கைது செய்து, நாமக்கல் தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். நுாற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.