ADDED : மே 19, 2024 02:58 AM
மோகனுார்: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மோகனுார் பகுதியில், அதிக அளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, மோகனுார் பகுதியில் வானில் கருமேகம் சூழ்ந்தது. அதனால், மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மாலை, 6:00 மணிக்கு மழை பெய்ய துவங்கியது.
ஒரு மணி நேரம், எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மோகனுார் - ப.வேலுார் சாலை, வள்ளியம்மன் கோவில் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து, இரண்டு அடி உயரத்துக்கு தேங்கி நின்றது. அதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை தள்ளி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதற்கிடையில், இரவு, 7:45 மணிக்கு மீண்டும் மழை பெய்ய துவங்கியது. இது, இரவு, 8:30 மணிக்கு மேலும் நீடித்தது.

