/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தைகளுடன் மனைவி பலி மாயமான கணவரும் தற்கொலை
/
குழந்தைகளுடன் மனைவி பலி மாயமான கணவரும் தற்கொலை
ADDED : மார் 06, 2025 01:39 AM
நாமக்கல்:நாமக்கல்லில் மனைவி, இரண்டு குழந்தைகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாயமான கணவர் கரூரில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி, ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் பிரேம்ராஜ், 33; நாமக்கல் தனியார் வங்கியில் காப்பீட்டு பிரிவில் பணியாற்றினார். சில மாதங்களாக மும்பையிலும் பணிபுரிந்துள்ளார்.
சீராப்பள்ளியை சேர்ந்த தாய் மாமன் சண்முகசுந்தரத்தின் மகள் மோகனப்பிரியாவை, 33, காதல் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு பிரணிதி ராஜ், 6, என்ற மகள், பிரினீஷ் ராஜ், 2, என்ற மகனும் இருந்தனர்.
மும்பையில் இருந்து வந்த பிரேம்ராஜ், சமீபத்தில் தான் நாமக்கல்லில் சேலம் சாலையில் உள்ள பதி நகருக்கு குடிவந்தார். வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்தார்.
மோகனப்பிரியா தனது குழந்தைகளுடன் நேற்று முன்தினம், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்; பிரேம்ராஜ் மாயமாகி இருந்தார். ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி தலைமையிலான இரண்டு தனிப்படையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம், கரூர் - வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷன் இடையே, அமராவதி ஆற்றுப்பாலம் தண்டவாளத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில், பிரேம்ராஜ் என்பது தெரியவந்தது.
கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் வந்தவர், ராமேஸ்வரம் செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். பிறகு ரயில் நிலைய பிளாட்பார்ம் வழியாக நடந்து சென்றவர், ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பிரேம்ராஜுக்கும், ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.