/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தவணை கட்டியும் லாரி ஜப்தி ரூ.11 லட்சம் தர உத்தரவு
/
தவணை கட்டியும் லாரி ஜப்தி ரூ.11 லட்சம் தர உத்தரவு
ADDED : ஜூலை 03, 2024 02:10 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி அடுத்த கள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முகிலன், 41.
இவர், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள ஹெச்.டி.எப்.சி., வங்கியில், 2017 டிசம்பரில், 23 லட்சம் ரூபாய் கடன் பெற்று, லாரி வாங்கினார். 59 மாதங்களுக்கு மாத தவணை, 48,400 ரூபாய்- வீதம், கடன் தொகையை செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தப்படி, 16 மாதங்கள், மாதாந்திர தவணை தொகையை சரியாக வங்கியில் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், 2019 செப்டம்பரில் எந்த முன்னறிவிப்பும் இன்றி, லாரியை வங்கி நிர்வாகம் அடியாட்களை வைத்து கைப்பற்றியது.
சொந்த பணம், 12 லட்சம் ரூபாய், கடன் பெற்ற பணம் 23 லட்சம் ரூபாய் என, 35 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய லாரியை, 2021 ஜூனில், வங்கி நிர்வாகம், 13.65 லட்சம் ரூபாய்-க்கு விற்றது. லாரியை விற்ற பணம் போக மேலும், 11.39 லட்சம் ரூபாயை- செலுத்துமாறு முகிலனுக்கு, வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
அதிர்ச்சி அடைந்த முகிலன், வங்கியின் சேவை குறைபாட்டிற்காக, தனக்கு தான் இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.
குறைந்த விலையில் லாரியை ஏலத்தில் விற்பனை செய்ததற்கு, 6.75 லட்சம், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புக்கு, 4.54 லட்சம், வழக்கு செலவு, 10,000 என, மொத்தம், 11.49 லட்ச ரூபாயை, நான்கு வார காலத்திற்குள் லாரி உரிமையாளருக்கு, வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும்.
மேலும், வழக்கு தாக்கல் செய்தவர், வங்கிக்கு எந்த தொகையும் செலுத்த வேண்டியது இல்லை என்ற சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டனர்.