/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரியில் மணல் கடத்தல் ஜோர் கண்டுகொள்ளாத வருவாய் துறை
/
காவிரியில் மணல் கடத்தல் ஜோர் கண்டுகொள்ளாத வருவாய் துறை
காவிரியில் மணல் கடத்தல் ஜோர் கண்டுகொள்ளாத வருவாய் துறை
காவிரியில் மணல் கடத்தல் ஜோர் கண்டுகொள்ளாத வருவாய் துறை
ADDED : மே 30, 2024 09:19 PM
ப.வேலுார்,:நாமக்கல் மாவட்டம், அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக சரக்கு ஆட்டோ, லாரிகளில் மணல் கடத்தல் ஜோராக நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஒருவந்துாரில் அரசு மணல் குவாரி செயல்பட்டது. இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு, வளையப்பட்டி சாலை செவிட்டு ரங்கப்பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரால், 2023 செப்., 12 முதல் மணல் குவாரி செயல்படாமல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பரமத்தி வேலுார் சுற்று வட்டார பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு மணல் தேவை அதிகரித்ததால், காவிரி கரையோர பகுதிகளில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது.
ப.வேலுார், அனிச்சம்பாளையம், அண்ணா நகர், வெங்கரை, பொத்தனுார் ஆகிய பகுதிகளிலும், மோகனுார் அடுத்த மணப்பள்ளி, குமாரபாளையம், செங்கப்பள்ளி ஆகிய கிராம பஞ்.,களில் உள்ள காவிரி ஆற்றிலும் மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. டூ - வீலர்களில் மூட்டை மூட்டையாக எடுத்து வரப்பட்டு, ஒரு இடத்தில் மணலை குவித்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த முறையால் தாமதமும், செலவும் அதிகமானதால், பொக்லைன் இயந்திரத்தை காவிரி ஆற்றில் கொண்டு சென்று, அதன் மூலம் சரக்கு ஆட்டோவில் மணலை ஏற்றி வெட்டுக்காட்டுப்புதுார், தென்றல் நகரில் கொட்டி வைத்து ப.வேலுார் சுற்று வட்டார பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.
இதே போல, அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் மணல் அள்ளி, லாரிகள் வாயிலாக வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர். இதற்காக ஒரு மூட்டைக்கு, 50 - 70 ரூபாய் வரை தரப்படுகிறது. ஒரு யூனிட் மணல், 12,000 முதல் 15,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கனிம கொள்ளையை தடுக்க வேண்டிய வருவாய், கனிம வளம், வனத்துறை, போலீஸ் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால், இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்து மணல் கொள்ளையடிக்க செல்லும் வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்களை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
மணல் திருட்டை தடுத்து நிறுத்த, மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.