/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தின விழா
/
நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 06, 2024 01:42 AM
நாமக்கல், செப். 6-
நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் நடந்த ஆசிரியர் தின விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகம், 'நோயற்ற வாழ்விற்கு சரியான உணவு பழக்க வழக்கம், நல்ல ஓய்வு, மாலை நேர உடற்பயிற்சி போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்' என, பேசினார். விழாவில், நடப்பு ஆண்டில் ஓய்வு பெறும் பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பேராசிரியர்களுக்கு மாதுளை, கொய்யா, சிறு நெல்லி, சந்தனம் மற்றும் செம்மரம் போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப் பைகள் பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லுாரி உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளரும், விலங்கியல் துறை உதவி பேராசிரியருமான பாபு, கல்லுாரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும், தாவரவியல் துறை இணை பேராசிரியருமான வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.
* நாமகிரிப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.
கவுண்டம்பாளையம், நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்ட்பட்டி அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
* சேந்தமங்கலம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அப்துல்கலாம் நண்பர்கள் குழு சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆடிட்டர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.