/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வனத்துறை அமைச்சர் துவக்கி வைப்பு
/
ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வனத்துறை அமைச்சர் துவக்கி வைப்பு
ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வனத்துறை அமைச்சர் துவக்கி வைப்பு
ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வனத்துறை அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : செப் 16, 2024 02:46 AM
நாமக்கல்: காவிரிக்கரையில், ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியை, மோகனுாரில், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும், 'காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி-2024' ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை நடக்கிறது.'கற்பகத்தரு' என்று சிறப்பிக்கப்படும் பனைமரம், நம் தமிழக பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பனை மரம் என்பது, 'தமிழகத்தின் மாநில மரம்' என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.
இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. பனை மரம் என்பது ஒரு சிறந்த பணப்பயிராக விளங்குகிறது. இதிலிருந்து, 500க்கும் மேற்பட்ட பொருட்கள் நமக்கு பயனளிக்கும் வகையில் கிடைக்கிறது. நன்கு வளர்ந்த ஒரு பனை மரம், 100 ஆண்டுகாலம் வரை ஆயுளுடன் வாழ்கிறது. இந்த பனை மரத்தில், 30-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. தற்காலத்தில் அதன் வகைகள் குறைந்துவிட்டது.
இதனால் பனைமரம் நடுவது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா, ஒருவந்துார் பஞ்., காவிரிக்கரை பகுதியில், ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி இயக்கம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பனை விதைகள் நடும் நெடும் பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 19 டவுன் பஞ்., 14 ஒன்றியங்கள், 308 பஞ்.,களில், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், காவிரி கரையோர பகுதிகள் மற்றும் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், ஏரி, வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில், இரண்டு லட்சத்து, 53,450 பனை விதைகள் நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
நாமக்கல் கூடுதல் எஸ்.பி., ஆகாஷ் ஜோசி, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, நெடுஞ்சாலைகள் துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, அட்மா திட்டத்தலைவர் நவலடி, மோகனுார் டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், கவுன்சிலர் செல்லவேல், செயல் அலுவலர் கலைராணி உள்பட பலர் பங்கேற்றனர்.