/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசு சரிவு
/
முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசு சரிவு
ADDED : ஜூலை 26, 2024 08:24 PM
நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும், 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, 'நெக்' தினசரி முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
கடந்த, 1ல் கொள்முதல் விலை, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. 8ல், 520 காசாக உயர்ந்தது. 18 நாட்கள் நீடித்த நிலையில், நேற்று ஒரே நாளில், 30 காசு குறைக்கப்பட்டு, 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது, பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
வழக்கமாக ஆடி மாதம், முட்டை நுகர்வு சரியும். அதேபோல், கடந்த இரண்டு வாரமாக முட்டை நுகர்வு சரிந்துள்ளது. மேலும், ஐதராபாத் மண்டலத்தில், இரண்டு முறை கொள்முதல் விலையை குறைத்துள்ளனர். ஆனால், நாமக்கல் மண்டலத்தில் குறைக்கவில்லை. இதற்கிடையே, 'நெக்' விலையில் இருந்து, 50 காசு குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். அவற்றை கருத்தில் கொண்டு, 30 காசு குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

