/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விட்டு வழிபாடு
/
காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விட்டு வழிபாடு
ADDED : ஆக 04, 2024 01:42 AM
ப.வேலுார், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ப.வேலுாரில் காவிரித்தாயை வணங்கும் வகையில், ஆற்றில் மோட்ச தீபம் விடுவது வழக்கம். நடப்பாண்டு, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றில் குளிக்கவும், பூஜை செய்யவும், நேற்று தடை விதிக்கப்பட்டது. இதனால், ப.வேலுார் ராஜா வாய்க்காலின் கரையில் முளைப்பாரி வைத்து, படையல் போட்டு வழிபட்டனர்.
மாலை, 5:30 மணிக்கு, காவிரி தாயை வழிபடும் வகையிலும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாடு சுபிட்சம் பெற வேண்டியும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மோட்ச தீபத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், மேளதாளம் முழங்க மோட்ச தீபம் காவிரி ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து அந்த தீபத்தை காவிரி ஆற்றின் உள்பகுதிக்கு கொண்டு சென்று, ஆற்றில் விடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தேசிய நெடுஞ்சாலை, பாலத்திலிருந்து மோட்ச தீபத்தை வழிபட்டனர்.
பாதுகாப்புக்காக, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா, இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார், ஆர்.ஐ., தங்கமணி, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன், எஸ்.ஐ., குமார், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கில், ப.வேலுார் காவிரி ஆற்றில் பரிசல் போட்டி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு அதிகப்படியான தண்ணீர் காவிரி ஆற்றில் வருவதால் பரிசல் போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.