ADDED : ஜூலை 15, 2026 05:29 AM
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் யூனியன், மொஞ்சனுார் கிராமத்தில், மஞ்சு என்பவரது பெயரில், 2019 முதல் கல்குவாரிக்கு பாறைகள் உடைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால, சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் பாறைகளை உடைக்கும் பணி தொடங்கியது. பாறைகளை வெடிவைத்து தகர்க்கும்போது குடியிருப்புகள் சேதாமாகும், சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கால்நடைகள் மற்றும் விவசாயம் பாதிப்படையும் எனக்கூறி, தடுக்க முயன்றனர். புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன், திருச்செங்கோடு தாசில்தார் ராஜா ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென, அங்கிருந்த சாலையில் அமர்ந்து பாறைகளை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்செங்கோடு டி.எஸ்.பி., தங்கவேல், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் எதிர்ப்பு தெரிவித்த, 11பேரை குண்டுக்கட்டாக துாக்கி கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின், போலீஸ் பாதுகாப்புடன் கல்குவாரிக்கு பாறைகள் உடைக்கும் பணி துவங்கியது.
