/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதமலையில் ரூ.140 கோடியில் சாலைப்பணி
/
போதமலையில் ரூ.140 கோடியில் சாலைப்பணி
ADDED : பிப் 18, 2024 10:45 AM
ராசிபுரம்: போதமலைக்கு, 140 கோடி ரூபாயில் சாலை அமைக்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார்.
ராசிபுரம் தாலுகா, வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட போதமலை, கடல் மட்டத்தில் இருந்து, 1,100 மீட்டர் உயத்தில் உள்ளது. இங்குள்ள குக்கிராமங்களான கீழூர், மேலுார், கெடமலையில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த மலை கிராமங்களை இணைக்கும் வகையில், 140 கோடி ரூபாயில், 31 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின், நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதையொட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், ராசிபுரம் யூனியன் அலுவலகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் உமா, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, கீழூருக்கு செல்ல வடுகம் பகுதியில் இருந்து சாலை அமைக்கும் பணி தொடங்கும் இடத்தில் நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இதில், மலைவாழ் மக்கள் சார்பில், எம்.பி., ராஜேஸ்குமார், அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி உள்ளிட்டோருக்கு குத்துவிளக்கு நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
போதமலைக்கு சாலை அமைக்க மத்திய அரசிடம், இரண்டு கட்டமாக அனுமதி பெறப்பட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே மலைவாழ் மக்களுக்காக, தி.மு.க., அரசு போராடி இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது. மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை என அனைத்து தரப்பினரும் இதற்காக பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். அமைச்சர் மதிவேந்தன் தன்னை அமைச்சர் என்று பார்க்காமல், சாதாரண குடிமகனாக ஊராக வளர்ச்சித்துறை செயலாளரை பார்த்து பேசி இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் எம்.பி., சின்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் துரைசாமி, அரசு வக்கீல் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.