/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குப்பை லாரிக்கு ரூ.3 லட்சம் எப்.சி., செலவு
/
குப்பை லாரிக்கு ரூ.3 லட்சம் எப்.சி., செலவு
ADDED : ஜன 16, 2024 10:51 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்.,க்கு சொந்தமான குப்பை அள்ளும் மினி லாரியை எப்.சி., செய்ய, 3 லட்சம் ரூபாய் செலவானதாக பில் தொகை காண்பித்த துப்புரவு ஆய்வாளர், ஊழியர்களுக்கு 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதிக்கு குப்பை சேகரிக்க ஒரு துப்புரவு ஆய்வாளர், மூன்று மேஸ்திரிகள், 80 துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சேகரித்த குப்பையை எடுத்துச் செல்ல, இரண்டு டிராக்டர், ஒரு மினி லாரி என மூன்று வாகனங்கள் உள்ளன. மினி லாரி வாங்கி, 15 ஆண்டுக்கு மேலானதால் எப்.சி., செய்ய நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில், கடந்த ஆறு மாதத்துக்கு முன் துப்புரவு ஆய்வாளர் குருசாமி மேற்பார்வையில் பராமரிக்க விடப்பட்டது.
கடந்த மாதம், மினி லாரி பராமரிப்பு பணி நிறைவடைந்ததாக கூறி, 3 லட்சம் ரூபாய்க்கான பில் பட்டியலை துப்புரவு ஆய்வாளர் குருசாமி, டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வண்டிக்கு, 3 லட்சம் ரூபாய் பராமரிப்பு செலவு என வந்த பில் தொகையால் அதிர்ச்சியடைந்த டவுன் பஞ்., அதிகாரிகள், மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
இதில், குப்பை அள்ளும் மினி லாரிக்கு தேவையற்ற செலவு செய்தது தெரியவந்தது. இதனால் கடந்த ஆறு மாதமாக இரண்டு டிராக்டர், மட்டுமே குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, டவுன் பஞ்., செயல் அலுவலர் திருநாவுக்கரசு, குப்பை வண்டிக்கு தேவையற்ற செலவு செய்ததற்காக, துப்புரவு ஆய்வாளர் குருசாமி மற்றும் இதர பணியாளர்களுக்கு மெமோ கொடுத்துள்ளார். ஆனாலும், இதுவரை மினி லாரி டெலிவரி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.