ADDED : ஏப் 21, 2026 05:31 AM
நாமக்கல்: வரும் மே, 4ல், ஓட்டு எண்ணும் மையத்தில், உள்ளூர், மாநில, மத்திய போலீஸ் படையினர் என, மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சட்டசபை தேர்தல், வரும், 23ல் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு தொகுதிகளில், 132 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் இரவு முடியும் நிலையில், மே, 4ல், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி, போலீஸ் எஸ்.பி., விமலா முன்னிலையில், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லுாரியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு மையத்திலிருந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பிற பொருட்கள் அனுப்பி வைத்தல், பொருட்கள் பெறும் மையம், பாதுகாப்பு அறை அமைவிடம், ஓட்டு எண்ணிக்கை மையம், கட்டுப்பாட்டு அறை, தபால் ஓட்டு எண்ணுமிடம் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வளாகத்தை சுற்றியுள்ள, 100 மீ., வெளிவட்ட பகுதியிலிருந்து வாயிலில், உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணி, மைய பாதுகாப்பு வளையம், ஓட்டு எண்ணிக்கை வளாகத்தின் பிரதான வாயிலில், மாநில ஆயுத போலீஸ் படையினர் பணி, மிக உள்வட்ட பாதுகாப்பு வளையம், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் கூடத்தின் நுழைவு வாயிலில், மத்திய ஆயுத போலீஸ் படையினர் பணி உள்ளிட்ட, மூன்று அடுக்கு பாதுகாப்பு வளைய முறை அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல், உரிய உடல் சோதனை வசதிகள், 'சிசிடிவி' வீடியோ பதிவு வசதிகள், நுண் பார்வையாளர்களை பணியமர்த்துதல், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் தடுப்புகள் அமைத்தல் பற்றியும் துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., கண்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
