/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடைநின்ற மாணவர் 8 பேர் மீண்டும் சேர்க்கை
/
இடைநின்ற மாணவர் 8 பேர் மீண்டும் சேர்க்கை
ADDED : அக் 30, 2025 01:52 AM
நாமக்கல், பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளிக்கு நீண்ட நாட்கள் வருகை புரியாத மாணவர்களை மாவட்டம் முழுவதும் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், குழந்தைகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, பெற்றோர், குழந்தைகளை நேரில் சந்தித்து, கல்வியின் அவசியம் குறித்து விளக்கி வருகின்றனர். அதற்கான கள ஆய்வு பணி, தற்போது ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடந்து வருகிறது.
இந்நிலையில், பள்ளிப்பாளையம் ஒன்றியம், வெப்படை அரசு மேல்நிலைப்பள்ளியில், இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். அப்போது, பள்ளியில் இடையில் நின்ற மாணவி செல்வி, 11, ஸ்ரீதர், 10, சூர்யா, 8, மற்றும் சவுதாபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் தர்ஷன், 10, ஆகியோரை, அவர்களின் வீடுகளுக்கே சென்று, கல்வியின் அவசியம் குறித்து ஆலோசனை வழங்கி, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
மாவட்ட கல்வி அலுவலர் புருசோத்தமன், பள்ளி துணை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் அருள், சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமையாசிரியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

