/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு கோலாகலம்
/
மோகனுார் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு கோலாகலம்
ADDED : ஆக 04, 2025 08:46 AM
மோகனுார்: மோகனுார் காவிரி ஆற்றில், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, அசலதீபேஸ்வரர் கோவிலில், சுவாமி வழிபாடு செய்தனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலே, நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் உள்ள காவிரி ஆற்றில், ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குடும்பத்துடன் வருகை தந்து புனித நீராடினர். அதேபோல், புதுமண தம்பதியர், எண்ணெய் தேய்த்து குளித்து, காவிரித்தாயை வணங்கினர். தொடர்ந்து, புத்தாடை அணிந்து அசலதீபேஸ்வரர், மதுகரவேணி அம்பாளை வழிபட்டனர். மேலும், பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர். மஞ்சள் பூசிய கயிறுகளை தங்கள் கழுத்தில் கட்டிக்கொண்டனர். பின்னர் வாழை மட்டையில் தீபத்தை வைத்து மோட்ச தீபமாக காவிரி ஆற்றில் மிதக்கவிட்டு வழிபட்டனர்.
தொடர்ந்து, மோகனுார் காவிரி கரையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மதுகரவேணி சமேத அசலதீபேஸ்வரர் சுவாமியை, திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், இருசக்கர வாகனம், கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், கூட்டம் கூட்டமாக காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடினர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, 2022, 2024ல், பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், தற்போது, தண்ணீர் வரத்து குறைவால், இந்தாண்டு, புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டதால், மக்கள் குதுகாலித்தனர்.