/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொங்கல் விழா கொண்டாடாத வினோத கிராமம்
/
பொங்கல் விழா கொண்டாடாத வினோத கிராமம்
ADDED : ஜன 15, 2025 01:09 AM
வெண்ணந்துார் : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஆடி மாத பட்டமாக விதைக்கப்பட்ட நெல், நன்கு வளர்ச்சியடைந்து தை மாதத்தில் அறுவடைக்கு தயாராகும்.
இதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தை, 1ல் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், அதற்கு மாறாக, நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே உள்ள அத்தனுார், ஆயிபாளையம், கோம்பைக்காடு, அத்தனுார் புதுார், தட்டான்குட்டை புதுார், ஆலங்காடு புதுார், உடும்பத்தான் புதுார், தாசன் புதுார் ஆகிய எட்டு கிராமங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விசைத்தறி, விவசாயம், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பை மட்டுமே முக்கிய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த, 63 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடியதாகவும்; அப்போது ஊரில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கும், கால்நடைகளுக்கும், 'அம்மை' பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் செய்வதறியாது தவித்த மக்கள், பிரசித்திப்பெற்ற அத்தனுார் அம்மன் கோவிலில், அம்மனிடம் முறையிட்டுள்ளனர்.
அப்போது, அங்குள்ள ஒருவருக்கு அருள் வந்து, 'பொங்கல் பண்டிகையை கொண்டாடியதால் தான் ஊரில் உள்ள மக்களுக்கும், கால்நடைகளுக்கும், 'அம்மை' பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இனிமேல் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாம்' என, அருள்வாக்கு சொல்லியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த, 63 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து, அப்
பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:
கடந்த, 63 ஆண்டு களுக்கு முன் பொங்கல் பண்டிகையின் போது ஊரில் உள்ள மக்களுக்கும், கால்நடைகளுக்கும், 'அம்மை' நோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அத்தனுார் அம்மன் கோவிலில் அருள்வாக்கு கூறியதுபோல், இன்று வரை பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் கடைப்பிடித்து வருகின்றோம்.
சில நேரங்களில், வீட்டு வாசலில் பொங்கல் வைக்காமல், கோவில் மற்றும் வீட்டின் சமையலறையில் பொங்கல் வைப்போம்; மாட்டு பொங்கலின்போது, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, ஊர வைத்த பச்சரிசியை மாடுகளுக்கு ஊட்டி வருகிறோம்.
இந்த வழக்கத்தை,
தற்போதுள்ள தலைமுறையினரும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.