/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீடு திட்டம்; 'இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி' அறிமுகம்
/
குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீடு திட்டம்; 'இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி' அறிமுகம்
குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீடு திட்டம்; 'இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி' அறிமுகம்
குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீடு திட்டம்; 'இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி' அறிமுகம்
ADDED : ஆக 15, 2024 06:54 AM
நாமக்கல்: 'இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தில் பொதுமக்கள் இணைந்து பயன்பெறலாம்' என, நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், 'இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி', பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு, 520 ரூபாய், 555 ரூபாய், 755 ரூபாய் பிரீமியத்தில், 10 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய்க்கான, விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் மூலம், மிக குறைந்த பிரீமிய தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், 18 முதல், 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும், 'ஸ்மார்ட் போன்' மற்றும் 'பயோமெட்ரிக்' சாதனம் பயன்படுத்தி, 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக, 10 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம்) ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை) விபத்தால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். மேலும், விபத்தால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் -வரை வழங்கப்படும்.விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை, ஒரு நாளைக்கு அதிகபட்சம், 1,000 ரூபாய் வீதம், 15 நாட்களுக்கு (2 நாட்கள் கழிக்கப்படும்) வழங்கப்படும். உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியை செய்ய, 5,000 ரூபாய் வரை வழங்கப்படும்.இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை, ஒருவர் எடுப்பதன் மூலம், எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிகளையும், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். அதனால், பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் உடனே இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.