/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை
/
விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை
ADDED : ஆக 23, 2025 01:31 AM
நாமக்கல், ''விநாயகர் சிலை ஊர்வலத்தில், பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி., விமலா எச்சரித்தார்.
நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி, கூடுதல் எஸ்.பி.,க்கள் தனராசு, அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எஸ்.பி., விமலா தலைமை வகித்து பேசியதாவது:
சிலை அமைப்பாளர்கள், தடையில்லா சான்று பெற, உதவி கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, சிலைகள், 10 அடிக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மதம் தொடர்பான இடங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில், சிலைகளை அமைக்க கூடாது. விநாயகர் சிலை பாதுகாப்பிற்காக, சிலை அமைப்பாளர்கள் பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும்.குழுவினரில், இரண்டு பேர், 24 மணி நேரமும், சிலையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். தீ விபத்து ஏற்படாத வகையில், தகர பந்தல் அமைக்க வேண்டும். குமாரபாளையம், கொக்கராயன்பேட்டை, இறையமங்கலம், சோழசிராமணி, ஜேடர்பாளையம், ப.வேலுார், மோகனுார் உள்ளிட்ட, ஏழு இடங்களில் இருக்கும் ஆற்றுப்பகுதிகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
விநாயகர் சிலை ஊர்வலத்திலும், அவற்றை கரைக்கும் இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மது அருந்திவிட்டும் வரக்கூடாது. மேலும், சிலைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில், அளவுக்கு அதிகமாக ஆட்கள் பயனிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்து முன்னணியினர், விநாயகர் சிலை அமைப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

