/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பருத்தியில் காய் அழுகல் நோய் கட்டுப்படுத்த ஆலோசனை
/
பருத்தியில் காய் அழுகல் நோய் கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : ஜன 16, 2024 10:51 AM
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில், பருத்தியில் காய் அழுகல் நோய் அதிகளவு உள்ளது. அதை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது பருத்தியில் காய் அழுகல் நோய் பாதிப்பு அதிகளவு காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது. ராசிபுரம் வேளாண்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
பருத்தி பூக்கள் மற்றும் காய்கள் உருவாகும் நேரத்தில், அதிக மழை பெய்தால் காய் அழுகல் நோய் ஏற்படும். அதுமட்டுமின்றி பூச்சிகளால் உண்டாகும் காயங்கள், பருத்தி செடிகளில் நெருக்கம், பரிந்துரைக்கு அதிகமாக தழைச்சத்து இடுதல் ஆகியவற்றால் காய் அழுகல் நோய் ஏற்படுகிறது. காய் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டால், காய் முழுவதும் கருப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும். அழுகல் வெளியிலோ உள்பகுதியிலோ
காணப்படும்.
காய் வெடிக்காமல் இளம் பருவத்திலேயே உதிர்ந்துவிடும். இதை தடுக்க போதுமான பயிர் இடைவெளி விட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரம் அளவை பயன்படுத்த வேண்டும். கார்பென்டாசின், 20 கிராம் அல்லது மான்கோசெப், 800 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு ஏக்கருக்கு 1 கிலோ ஆகியவற்றை, 45ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க
வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.