/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார்த்திகை பட்டத்தில் பயிர் சாகுபடி விதை பரிசோதனை செய்ய அறிவுரை
/
கார்த்திகை பட்டத்தில் பயிர் சாகுபடி விதை பரிசோதனை செய்ய அறிவுரை
கார்த்திகை பட்டத்தில் பயிர் சாகுபடி விதை பரிசோதனை செய்ய அறிவுரை
கார்த்திகை பட்டத்தில் பயிர் சாகுபடி விதை பரிசோதனை செய்ய அறிவுரை
ADDED : நவ 29, 2025 01:31 AM
நாமக்கல் :கார்த்திகை பட்டத்தில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், விதை பரிசோதனை செய்து தரம் அறிந்து விதைக்க வேண்டும் என, நாமக்கல் வேளாண் அலுவலர் தேவிப்பிரியா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில், கார்த்திகை பட்டத்திற்கு உகந்த பயிர் நிலக்கடலை மற்றும் எள் ஆகும். கார்த்திகை பட்டம் என்பது, நவ., டிச., மாதத்தில் விதைப்பு செய்வதாகும். இப்பட்டத்தில், மழை, தட்பவெப்ப நிலை சாதகமாக உள்ளதால், விதைப்பு செய்தால் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம். எள், நிலக்கடலை சாகுபடிக்கு நிலம் தயாரிக்கும்போது, இருமுறை உழவு செய்து மண்கட்டிகள் இல்லாமல், பொலபொலப்பாக புழுதி ஆகும் வரை தயார் செய்து விதைக்க வேண்டும்.
நிலக்கடலையில், வி.ஆர்.ஐ.,9, வி.ஆர்.ஐ.,10, கிரீன்மர்-4, கிரீன்மர்-5 ஆகிய ரகங்கள் கார்த்திகை பட்டத்திற்கு உகந்ததாகும். நிலக்கடலை பயிரில் உற்பத்தியை அதிகரித்து, திரட்சியான காய்களை பெற, ஒரு ஏக்கருக்கு, 160 கிலோ ஜிப்சத்தை இருமுறை பிரித்து இட வேண்டும். முதல், 80 கிலோ ஜிப்சம் அடியுரமாகவும்; பின், 40- முதல், 45ம் நாளில் களையெடுப்பின்போது, 80 கிலோ ஜிப்சமும் இட்டு மண் அணைக்க வேண்டும்.
எள் சாகுபடியில், டி.எம்.வி.,3, டி.எம்.வி.,4, எஸ்.வி.பி.ஆர்.,1 போன்ற ரகங்கள், நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் பயிரிடப்பட்டு வருகின்றன. விதைகளின் தரம் நன்றாக இருந்தால் மட்டுமே அதிக மகசூல் பெற்று பயனடைய முடியும். அதனால், கார்த்திகை பட்டத்தில் பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் விதைப்பிற்கு முன் விதை பரிசோதனை செய்து விதையின் தரம் அறிந்து விதைப்பு செய்யலாம்.
தரமான நிலக்கடலை விதையில், குறைந்தபட்சம், 70 சதவீதம் முளைப்புத்திறன், 96 சதவீதம் புறத்துாய்மை, அதிகபட்சம், 9 சதவீதம் ஈரப்பதம் இருத்தல் வேண்டும். எள் விதைகளுக்கு குறைந்தபட்சம், 80 சதவீதம் முளைப்புத்திறன் இருத்தல் அவசியமாகும். விதையின் தரத்தை அறிந்துகொள்ள, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூடுதல் வளாக கட்டடத்தில் அறை எண்.13ல் இயங்கி வரும் விதை பரிசோதனை நிலையத்தில் ஒரு மாதிரிக்கு, 80 ரூபாய் கட்டணம் செலுத்தி விதையின் தரத்தை அறிந்து பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

