/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விதை நெல்லுக்கு மானியம் வேளாண்துறை அழைப்பு
/
விதை நெல்லுக்கு மானியம் வேளாண்துறை அழைப்பு
ADDED : ஆக 30, 2025 12:54 AM
மல்லசமுத்திரம், 'மல்லசமுத்திரம் வட்டாரத்தில், மானிய விலை யில் விவசாயிகள் விதை நெல் பெற்றுக்கொள்ளலாம்' என, வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:
மல்லசமுத்திரம் வட்டாரத்தில், நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்ய உயர் விளைச்சல் தரும் தரமான சான்று பெற்ற நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கோ--55 என்ற குறுகிய கால ரகமானது, 584 கிலோவும், மத்திய கால ரகமான மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, 1,278 கிலோவும், சம்பா மசூரி எனப்படும் பி.பி.டி., 5204 ரகம், 2,300 கிலோவும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கோ-55 ரகமானது, துங்ரோ வைரஸ் நோய்க்கும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி பாக்டீரிய இலை கருகல் நோய், குலை நோய் ஆகியவற்றிற்கும், சம்பா மசூரி ரகமானது குலை நோய்க்கும் எதிர்ப்பு திறனுடையது. தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் புதிய ரகங்களை ஊக்கப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஒரு கிலோவிற்கு, 20 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. விதை நெல் தேவைப்படும் விவசாயிகள், செம்பாம்பாளையத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.