/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாள் விழா
/
அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாள் விழா
ADDED : ஜன 15, 2025 01:07 AM
ப.வேலுார், :
ப.வேலுார் தாலுகா, ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து, 5,000 ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற, ராஜ வாய்க்கால் ஏற்படுத்தியவர் அல்லாள இளைய நாயக்கர்.
அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவே திகழும் அக்கால்வாயை அமைத்தவரை பெருமைப்படுத்தும் வகையில், அப்பகுதி விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, அல்லாள இளைய நாயக்கருக்கு, 21.80 லட்சம் ரூபாய் மதிப்பில், குவிமாடத்துடன் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு, 2023 ஜன., 28ல், துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். தொடர்ந்து, அவரது பிறந்த நாளான தை, 1ல், அரசு விழாவாக கொண்டாட அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி, அல்லாள இளைய நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஜேடர்பாளையத்தில் அமைந்துள்ள அல்லாள இளைய நாயக்கரின் திருவுருவ சிலைக்கு, நாமக்கல் கலெக்டர் உமா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்.எல்.ஏ., ஈஸ்வரன், எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., சுகந்தி, அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஜேடர்பாளையத்தில் உள்ள அல்லாள இளைய நாயக்கர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். இதையடுத்து, அல்லாள இளைய நாயக்கரின் வாரிசுதாரர்களுக்கு, அமைச்சர் மதிவேந்தன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தனித்துணை கலெக்டர் பிரபாகரன், தாசில்தார் முத்துக்குமார், பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரபிரசாத், மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.