ADDED : மே 24, 2026 05:13 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் சுற்றுவட்டாரங்களான, கோம்பைக்காடு, அண்ணாமலைபட்டி, நெ.3.கொமராபாளையம், பல்லவநாய்க்கன்பட்டி, குட்டலாடம்பட்டி, தேங்கல்பாளையம், ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் அரளி பூ சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் விளையும் பூக்களை விவசாயிகள் பறித்து, நாமக்கல், சேலம், ஆத்துார் பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.
தற்போது, வெண்ணந்துார் சுற்று வட்டாரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பூக்கள் வரத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதேநேரம், சுபமுகூர்த்த தினங்கள் ஏதும் இல்லாததால், பூக்களின் தேவை குறைந்து காணப்படுகிறது. கடந்த வாரம், ஒரு கிலோ, 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேலும், மல்லி, 240, முல்லை, 160, காக்கட்டான், 240, கலர் காக்கட்டான், 160, மலை காக்கட்டான், 240, ஏற்காடு மலை காக்கட்டான், 240, ஐ-செவ்வரளி, 50, வெள்ளரளி, 50, மஞ்சரளி, 50, செவ்வரளி, 50, நந்தியாவட்டம், 140, சிகப்பு நந்தியாவட்டம், 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
