/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செத்து மிதக்கும் மீன்களால் குடிநீரில் துர்நாற்றம்
/
செத்து மிதக்கும் மீன்களால் குடிநீரில் துர்நாற்றம்
ADDED : பிப் 08, 2024 12:38 PM
ப.வேலுார்: ஜேடர்பாளையம் அணைக்கட்டு காவிரியாற்றில் செத்து மிதக்கும் மீன்களால், குடிநீர் துர்நாற்றம் விசுகிறது. இதனால், மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து, சில நாட்களுக்கு முன் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதிக்கு வந்தபோது, அதில் மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்தன. இந்த மீன்கள் அழுகி நீரில் கலந்ததால், துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரும் நிறம் மாறி கருமையாக காட்சியளிக்கிறது. மேலும், காவிரி கரையோர பகுதிகளான ஜேடர்பாளையம், கபிலர்மலை, கந்தம்பாளையம், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரியாற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த தண்ணீரில் துர்நாற்றம் வீசியதால், மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாய முன்னேற்ற கழக பொறுப்பாளர் சவுந்தர்ராஜன் கூறியதாவது: காவிரியாற்றில் மீன்கள் அழுகி மிதப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சாயக்கழிவு நீர் கலந்ததால் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் காவிரியாற்றில் நிலைமை கவலை கொள்ள செய்துள்ளது. காவிரியாற்று நீரை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், காவிரியாற்றில் இறந்து கிடக்கும் லட்சக்கணக்கான மீன்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

