/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீவிர சிகிச்சை பிரிவு கட்ட பூமி பூஜை
/
தீவிர சிகிச்சை பிரிவு கட்ட பூமி பூஜை
ADDED : மார் 17, 2024 02:50 PM
ப.வேலுார்: ப.வேலுார் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். நகர அமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில், நாமக்கல் எம்.பி., சின்ராஜ் கலந்து கொண்டனர். விழாவில், 23.75 கோடி ரூபாய் மதிப்பில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பட்டணம், முனியப்பம்பாளையத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது. ராசிபுரம் யூனியன், பட்டணம், முனியப்பம்பாளையம் கிராமத்தில், 'அட்மா' திட்டத்தில் காய்கறி பயிர்களின் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
துணை தோட்டக்கலை அலுவலர் வைத்தியலிங்கம் கோடை உழவு, பருவம், ரகம், நுண்ணுாட்டம் போன்ற தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறினார். மேலும், நாமகிரிப்பேட்டை முன்னோடி விவசாயி குழந்தைவேல் பஞ்சகாவ்யம் தயாரித்தல், மீன் அமிலம் தயாரிப்பு, இ.எம்., கரைசல் தயாரிப்பு பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். தனியார் வேளாண் கல்லுாரி மாணவியர், விவசாயி ராஜீ தோட்டத்தில் மண்மாதிரி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இவ்வகுப்பிற்கு உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வேன் மோதி வாலிபர் பலி
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியன், முள்ளுக்குறிச்சியை அடுத்த உலிபுரத்தை சேர்ந்த பெரியசாமி மகன் விஜயகுமார், 30; இவர், நேற்று மாலை, 'ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நாமகிரிப்பேட்டை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில், விஜயகுமார் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விஜயகுமார் உயிரிழந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

