/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொள்முதல் விலையில் இருந்து குறைத்து கறிக்கோழி பிடிப்பு: தமிழக பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி நஷ்டம்

ADDED : ஜன 09, 2024 11:27 AM
நாமக்கல்: ''கொள்முதல் விலையில் இருந்து குறைத்து கறிக்கோழிகளை பிடிப்பதால், கடந்த டிசம்பரில், பண்ணையாளர்களுக்கு, 300 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'' என, தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறினார்.
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த, 1ல் கொள்முதல் விலை, 102 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த, 5ல், 10 ரூபாய் குறைக்கப்பட்டு, 92 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில், 10 ரூபாய் சரிந்துள்ளது, பண்ணையாளர்களை கவலையடைய செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
கறிக்கோழி ஒருகிலோ உற்பத்தி செய்ய, 95 ரூபாய் செலவாகிறது. அவற்றை கணக்கிட்டு, ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே, பண்ணையாளர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். ஆனால், கொள்முதல் விலை, 102 ரூபாய் என, நிர்ணயம் செய்திருந்தாலும், வியாபாரிகள், 32 ரூபாய் குறைத்து, 70 ரூபாய்க்கே கோழிகளை பிடிக்கின்றனர். கறிக்கோழி கொள்முதல் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக, கடந்த, 2023 டிசம்பரில், பண்ணையாளர்களுக்கு, 300 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.