/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நுகர்வு அதிகரிப்பால் கறிக்கோழி விலை கிடுகிடு
/
நுகர்வு அதிகரிப்பால் கறிக்கோழி விலை கிடுகிடு
ADDED : ஜன 30, 2024 03:14 PM
நாமக்கல் : நான்கு வாரம் கோழிக்குஞ்சு விடுவதை நிறுத்தியதால், 50 லட்சம் கிலோ உற்பத்தி சரிந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் நுகர்வு அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கை.கடந்த, 1ல் கறிக்கோழி ஒரு கிலோ, 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 5ல், 92 ரூபாய், 10ல், 82 ரூபாய், 15ல், 98 ரூபாய், 20ல், 82 ரூபாய், 25ல், 88 ரூபாய் என, படிப்படியாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த, 27ல், 98 ரூபாய், நேற்று, 107 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு வாரத்தில் கொள்முதல் விலை, 25 ரூபாய் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:பொங்கல், தைப்பூசம் முடிந்துள்ளதால், தமிழகத்தில், நுகர்வு அதிகரித்துள்ளது. ஒருகோழி, மூன்று கிலோ, 2.700, 2.500 கிலோ என்ற நிலையில் இருந்தது. தற்போது, இரண்டு கிலோ, 2.200 ஆக குறைந்துள்ளது. அதன் காரணமாக, 40 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழிகள், 41 நாட்கள் கழித்து பிடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் போது, விற்பனை இருக்காது என்பதை கருத்தில் கொண்டு, ஐந்து வாரத்துக்கு முன்பே, நான்கு வாரம் கோழிக்குஞ்சு விடுவதை நிறுத்திவிட்டனர். அதனால், வரும் பிப்., 9 முதல், 16 வரை, ஒரு வாரத்திற்கு கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். தற்போது, வாரம், 4.50 கோடி கிலோ விற்பனையாகும் நிலையில், 50 லட்சம் கிலோ உற்பத்தி சரிந்துள்ளது. அதன் காரணமாக, கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.