/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கறிக்கோழி கொள்முதல் விலை ஒரே நாளில் ரூ.15 சரிவு
/
கறிக்கோழி கொள்முதல் விலை ஒரே நாளில் ரூ.15 சரிவு
ADDED : நவ 03, 2024 01:21 AM
நாமக்கல், நவ. 3-
தீபாவளி முடிந்த இரண்டு நாட்களில், கறிக்கோழி கொள்முதல் விலை ஒரே நாளில், 15 ரூபாய் சரிந்துள்ளது. இது, பண்ணையாளர்களை கவலையடைய செய்துள்ளது.
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கை.
கடந்த, அக்., 1ல், ஒரு கிலோ, 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி, ஏற்றம் இறக்கம் காணப்பட்டு, கடந்த, 31ல், 113 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களில், கறிக்கோழி விற்பனை, இரண்டு கோடி கிலோ விற்பனையானது. தீபாவளி முடிந்த நிலையில், கொள்முதல் விலை, ஒரே நாளில், 15 ரூபாய் சரிந்துள்ளது. இது, பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.
இதுகுறித்து, பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:
பண்டிகை காலங்களில் கறிக்கோழி விலை மற்ற நாட்களை காட்டிலும் அதிகளவில் விற்பனையாகும். அதன்படி, தீபாவளி அன்றும், அதற்கு மறுநாளும் என, இரண்டு நாட்களில், 2 கோடி கிலோ விற்பனையானது. இதையடுத்து, விற்பனை சூடுபிடிக்காது என்பதால், கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டனர். அதன்படி, நேற்று ஒரே நாளில், 15 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை, இரண்டு வாரத்துக்கு நீடிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.