/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொத்துவரி செலுத்தி நகரை சொர்க்கபுரியாக்க அழைப்பு
/
சொத்துவரி செலுத்தி நகரை சொர்க்கபுரியாக்க அழைப்பு
ADDED : ஜன 28, 2025 07:01 AM
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில், வரியினங்களை வசூலிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட நாட்களில் கட்டணம் செலுத்தினால் தள்ளுபடி வழங்குவது என்பது உள்பட பல்வேறு வகையான நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். ஆட்டோ மூலம் பிரசாரம், ஊழியர்கள் மூலம் வீடு, கடைகளுக்கு சென்று நினைவூட்டுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், ராசிபுரம் நகராட்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில், நகராட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.அதில், 'சொத்துவரி செலுத்துவீர்; நகரை சொர்க்கபுரி ஆக்குவீர்', 'தொழில்வரி செலுத்துவீர்; நகரில் பூம் பொழில்கள் பல உருவாக்குவீர்', 'வரியினங்கள் வலிய வந்து வசூலிப்பது அல்ல; தானாக வந்து செலுத்த வேண்டியது', 'நகராட்சிக்கு உரிய காலத்தில் வரி செலுத்துவீர்; நகரின் நலன் பேணும் நற்குடிமகன் என நெஞ்சம் நிமிர்த்துவீர்' என, எழுதப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைனில் வரி செலுத்தும் முறை குறித்தும் விளக்கமாக தெரிவித்துள்ளனர். இந்த பேனர் வைத்த பிறகு, ஆன்லைனில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

