/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாடிவாசலில் 'சிசிடிவி' பொருத்த வேண்டும்: கலெக்டர்
/
வாடிவாசலில் 'சிசிடிவி' பொருத்த வேண்டும்: கலெக்டர்
ADDED : ஜன 06, 2024 01:10 PM
நாமக்கல்: 'ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடிவாசல் முகப்பு பகுதியில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: உச்சநீதிமன்ற அறிவுரைப்படி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஆண்டுதோறும் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின்படி அனுமதி வழங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் உள்ளடக்கிய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, துறைவாரியாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள், இணைய வழியாக www.jallikattu.tn.gov.in விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும். வாடிவாசலின் முகப்பு பகுதியில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டில் பங்குபெறும் அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, விளையாட்டில் பங்கேற்க உடல் ரீதியாக தகுதியான நபர்தான் என்பதை சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களும், சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ.,க்கள் சரவணன், சுகந்தி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் நடராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.