/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
6 அடி நீள பாம்புடன் விளையாடிய குழந்தை
/
6 அடி நீள பாம்புடன் விளையாடிய குழந்தை
ADDED : ஆக 03, 2025 12:48 AM
ராசிபுரம், பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், விபரம் தெரியாத குழந்தைகளுக்கு பாம்பும் விளையாட்டு பொருள்தான் என்பதை, ராசிபுரம் அருகே ஒரு சம்பவம் உணர்த்தியுள்ளது.
ராசிபுரம், கோனேரிப்பட்டி எக்ஸ்டென்ஷன் பகுதியில் குடியிருந்து வரும் முன்னாள் கவுன்சிலர் ராம்குமார் வீட்டின் வெளியில், 6 அடி நீள சாரைப்பாம்பு சென்றுள்ளது.
காயமடைந்த அந்த பாம்பால் வேகமாக நகர முடியவில்லை. இதை பார்த்த பெரியவர்கள் பதறியடித்து ஓடினர். ஆனால், அதே பகுதியை சேர்ந்த ஜனகன் மகன், 3 வயது குழந்தை அகிலன், பாம்பை கையில் பிடித்து விளையாட தொடங்கினான். தப்பி ஓட முயன்ற பாம்பு வாலை பிடித்து தரதரவென்று வீதியில் இழுத்து சென்றான்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த ராம்குமார், பாம்பை சிறுவனிடம் இருந்து மீட்டு அருகில் இருந்த கோனேரிப்பட்டி ஏரியில் விட்டு வந்தார். சிறுவன் பாம்பை பிடித்து விளையாடிய வீடியோ ராசிபுரத்தில் வைரலாகி வருகிறது.