ADDED : டிச 26, 2024 01:21 AM
நாமக்கல், டிச. 26-
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயம் மற்றும் அசெம்பிளி ஆப் காட் சபையில் சிறப்பு பிரார்த்தனையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 8:30 மணிக்கு பங்குதந்தை தாமஸ் மாணிக்கம் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் ஆலய பங்குத்தந்தை மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அதேபோல், நாமக்கல் - சேலம் சாலையில் அமைந்துள்ள அசெம்பிளி ஆப் காட் சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அதில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, தலைமை போதகர் நாதன் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையுடன் துவங்கியது. தொடர்ந்து ஏசு பிறப்பு குறித்து சிறுவர், சிறுமியர் நாடகம் நடத்தப்பட்டது. காலை, 8:30 மணிவரை நடந்த சிறப்பு ஆராதனையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

