/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையம் நீரேற்று நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
/
குமாரபாளையம் நீரேற்று நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : மே 04, 2024 07:03 AM
குமாரபாளையம் : மேட்டூர் அணையில் குறைந்தளவு நீர் இருப்பதாலும், அணைக்கு வரும் நீர்வரத்து குறைவாக இருப்பதாலும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டி, குமாரபாளையம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைவாக இருப்பதால், நகர மக்களின் குடிநீர் தேவை தினமும் பூர்த்தி செய்யக்கூடிய அளவில் உள்ளதா? என, நாமக்கல் கலெக்டர் உமா, காவேரி நகரில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அணையின் நீர் மட்டம் குறைந்தளவு இருக்கும் நிலையில், நீர்வரத்து குறைவாக இருக்கும் போது, பொதுமக்களுக்கு போதுமானதாக இருக்குமா? என நகராட்சி கமிஷனர் குமரன், பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோரிடம் கேட்டறிந்தார். நீர்வரத்து, 1,500 என்ற அளவில் வந்தாலும், நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியுமென, அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் குமரன் கூறியதாவது: குமாரபாளையம் நகராட்சி, 33 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு, 22,053 குடியிருப்புகளில், 85,000 பேர் வசித்து வருகின்றனர். குமாரபாளையம் நகராட்சியின் குடிநீர் திட்டமான இயல்பு நீரேற்று நிலையத்தில் இருந்து, 7.50 எம்.எல்.டி., அளவு குடிநீர் நீரேற்றம் செய்யப்பட்டு, இடைப்பாடி சாலையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, 71.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, 8 குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.
ஆற்றில் நீர்வரத்து குறையும் நிலை ஏற்படுவதை கருதி, கடந்த டிச., மாதம், ஆற்றில் உள்ள குடிநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது. நாளது தேதி வரை குமாரபாளையம் நகராட்சியில், 13,086 குடிநீர் கிளை இணைப்புகள், 93 பொதுக்குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்படும், 1,500 கனஅடி நீரைக்கொண்டு, இந்நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாகும். காவிரி ஆற்றின் நீர்வரத்து, நகரில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் பெறப்படும் தண்ணீரை கொண்டு கோடைகால வறட்சியினை ஈடு செய்ய இயலும். இவ்வாறு அவர் கூறினார்.