/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.சாண்ட், பி.சாண்ட் விலைஉயர்வால் கட்டுமான பணி பாதிப்பு
/
எம்.சாண்ட், பி.சாண்ட் விலைஉயர்வால் கட்டுமான பணி பாதிப்பு
எம்.சாண்ட், பி.சாண்ட் விலைஉயர்வால் கட்டுமான பணி பாதிப்பு
எம்.சாண்ட், பி.சாண்ட் விலைஉயர்வால் கட்டுமான பணி பாதிப்பு
ADDED : ஏப் 25, 2025 01:58 AM
சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், வையப்பமலை, ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட கிரஷர்கள் உள்ளன. இங்கு ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்டவை மலைகளை குடைந்து, பாறைகளில் இருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீடு கட்டுதல், வணிக வளாகம், அரசு கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தேவைப்படும் எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை மணலுக்கு பதிலாக கட்டட பணிகளுக்கு, அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிரஷர்களில், எம்.சாண்ட், பி.சாண்ட் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் டெலிவரி விலை, 3,000 ரூபாயாகவும், ஜல்லி, 2,200 ரூபாயாகவும் இருந்தது. அதன்பின், கடந்தாண்டு தமிழகம் முழுவதும் ஒரே நாளில், 1 யூனிட் எம்.சாண்ட், 4,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதேபோல், பி.சாண்ட், 5,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாகவும், ஜல்லி 1 யூனிட் 4,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வால், கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சிமென்ட் செங்கல், பிளேயர்ஸ் கற்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.
இது குறித்து, கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளி குமார் என்பவர் கூறுகையில்,''கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட அரசு ரூ.3.10 லட்சம் வழங்கும் நிலையில், எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்வால் இந்த தொகை பற்றாக்குறையாக உள்ளது. எனவே விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
கட்டட பொறியாளர் சரவணகுமார் கூறுகையில்,'' இந்தாண்டு ஐந்து புதிய கட்டடங்கள் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட கட்டட பணியை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.