ADDED : மே 22, 2025 02:01 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட, கொமராபாளையம் பஞ்., கோம்பைக்காடு, அண்ணாமலைப்பட்டி பகுதி மலை கிராமமாகும். இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலையில் இருந்து, தச்சங்காடு வழியாக கோம்பைக்காடு மலை கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேலும், கோம்பைக்காடு, அண்ணாமலைப்பட்டி போன்ற பகுதியில் இருந்து அலவாய்ப்பட்டி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ,- மாணவியர் இந்த சாலை வழியாக தினசரி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலை, 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தற்போது ஜல்லி பெயர்ந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சாலையில் போக்குவரத்து சற்று குறைவாக உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள சாலையை விடுமுறை முடிவதற்கு முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.