ADDED : ஜூலை 21, 2025 08:13 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் விடுதலைக்களம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. நிறுவன தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பெரியூர் பூபதி, போடிநாயக்கன்பட்டி தங்கவேலு, ஆசிரியர் ரங்கசாமி, நாமக்கல் மாநகர பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மீது தொடர் கொலை வெறி தாக்குதல்- அச்சுறுத்தலை கண்டித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், வரும், 28ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாட்டுக்கோழி விலை உயர்வு
ப.வேலுார்: -
ப.வேலுார், சுல்தான்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுவது வழக்கம். அதன்படி, நேற்று கூடிய சந்தையில், பரமத்தி, ப.வேலுார்,மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நாட்டுக்கோழிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
கடந்த வாரம், நாட்டுக்கோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்றது, நேற்று, கிலோவுக்கு, 100 ரூபாய் கூடுதலாகி, 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாதத்தை முன்னிட்டு, பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவில்களில் வேண்டுதலை நிறைவேற்ற நாட்டுக்கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்துவர். இதனால் நாட்டுக்கோழி விலை கணிசமாக உயர்ந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.