பிளந்துள்ள பழமையான வேப்பமரம் விபத்துக்கு முன் அகற்ற கோரிக்கை
பிளந்துள்ள பழமையான வேப்பமரம் விபத்துக்கு முன் அகற்ற கோரிக்கை
ADDED : செப் 24, 2026 06:22 AM
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை
டவுன் பஞ்., மயான சாலை அருகே, பிளந்து காணப்படும் பழமையான வேப்ப
மரத்தால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
நாமகிரிப்பேட்டை
டவுன் பஞ்., ஆத்துார் செல்லும் பிரதான சாலையில், ஆர்.சி.எம்.எஸ்., வளாகம்
அருகே, மயானத்திற்கு செல்லும் பாதை பிரிந்து செல்கிறது. இந்த மயான
பாதையின் ஓரத்தில், 30 ஆண்டு பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த
வேப்பமரம், நடுப்பகுதியில் இரண்டாக பிளந்து வருகிறது. இந்த சாலை
வழியாக, ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று
வருகின்றனர்.
குறிப்பாக,
மயானத்திற்கு இறுதி ஊர்வலமாக வருபவர்கள் மற்றும் சடங்குகளை
முடித்துவிட்டு திரும்புபவர்கள், இந்த மரத்தின் நிழலில் அமர்ந்து
இளைப்பாறி செல்கின்றனர். தற்போது, மரத்தின் இரண்டு கிளைகளுக்கு இடையே
பிளந்துள்ளதால், பலத்த காற்று வீசும்போதோ அல்லது லேசான அதிர்வு
ஏற்படும் போதோ மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
மரத்தடியில் பொதுமக்கள்
அமர்ந்திருக்கும் நேரத்திலோ அல்லது அவ்வழியாக பாதசாரிகள் கடந்து
செல்லும் போதோ இந்த மரம் முறிந்து விழுந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம்
ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில்
பார்வையிட்டு, வேப்பமரத்தை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
